ஐபிஎல் 2024க்கான ஏலத்தை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டம்
பிசிசிஐ ஐபிஎல் 2024க்கான ஏலத்தை இந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 9ஆம் தேதி டெல்லியில் மகளிர் ஐபிஎல் 2024க்கான ஏலம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு பிறகு துபாயில் டிசம்பர் 15 முதல் 19 வரை ஆடவர் ஐபிஎல்லுக்கான ஏலம் நடைபெற உள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கைகளின்படி, ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனினும், தகவலறிந்த வட்டாரங்களின்படி, துபாயில் ஏலம் டிசம்பர் 18 அல்லது 19 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு, பிசிசிஐ ஏலத்திற்கு துருக்கியின் இஸ்தான்புல்லை முன்மொழிந்தாலும், இறுதியாக கொச்சியைத் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
வீரர்களின் வர்த்தகம்
அணிகளுக்கிடையே வீரர்களை மாற்றிக்கொள்வதற்கான வீரர்களின் வர்த்தக காலம் தர்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஐபிஎல் அணிகளுக்கு இடையே எந்த ஒரு வீரர் இடமாற்றமும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, மகளிர் ஐபிஎல் பொறுத்தவரை பிசிசிஐ இன்னும் அணி உரிமையாளர்களுக்கு ஏல விவரங்களை வழங்கவில்லை. மேலும், மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்தும் முறை குறித்து இன்னும் தெளிவின்மை உள்ளது. இது கடந்த ஆண்டு மும்பையில் நடத்தப்பட்டதை போல் ஒரு நகரத்தில் நடத்தப்படுமா அல்லது இந்தியாவில் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலும் ஒருபுறம் நடக்க இருந்தாலும், 2019ஐ போல முழுக்க உள்நாட்டிலேயே நடத்தப்பட உள்ளதாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.