ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் நடுநிலை போட்டியாளர்களாக ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி
வெள்ளியன்று (டிசம்பர் 9) ஒலிம்பிக் தலைவர்கள் அடுத்த ஆண்டு பாரிஸ் விளையாட்டுகளில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் நடுநிலை போட்டியாளர்களாக பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீதான போர் காரணமாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரஷ்யாவுக்கு தடை விதித்த நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, ரஷ்யாவைச் சேர்ந்த 8 வீரர்களும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று வீரர்களும் மட்டுமே நடுநிலை விளையாட்டு வீரர்களாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். குழு போட்டிகளில் பங்கேற்க தடை தொடரும் என மேலும் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 60க்கும் மேற்பட்ட உக்ரைன் விளையாட்டு வீரர்கள் அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக் கமிட்டியின் உத்தரவுக்கு ரஷ்யா கண்டனம்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,ரஷ்யா அல்லது பெலாரஸின் கொடி, கீதம், வண்ணங்கள் அல்லது வேறு எந்த அடையாளங்களும் பாரீஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுகளில் எந்த அதிகாரப்பூர்வ இடத்திலோ அல்லது எந்த அதிகாரப்பூர்வ விழாவிலோ காட்டப்படாது எனத் தெரிவித்துள்ளது. மேலும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு ரஷ்ய அல்லது பெலாரஸ் அரசு அல்லது அரசு அதிகாரிகள் அழைக்கப்பட மாட்டார்கள் அல்லது அங்கீகாரம் பெற மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷ்யா தனது விளையாட்டு வீரர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பாரபட்சமானது என்று குறிப்பிட்டதோடு, இது விளையாட்டின் கொள்கைகளுக்கு எதிரானது என கண்டித்துள்ளது. எனினும், ஒலிம்பிக் கமிட்டியின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விளையாட்டு வீரர்கள் பாரிஸ் செல்வார்கள் என்று தெரிவித்துள்ளது.