காயம் காரணமாக ரஷீத் கான் நீக்கம்! இலங்கை தொடருக்கான ஆப்கான் அணிக்கு பின்னடைவு!
இலங்கை தொடருக்கான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக ரஷீத் கான் ஆப்கான் கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜூன் 7 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஆப்கானிஸ்தான் மோதும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். அவர் பந்துவீச்சு மட்டுமல்லாது பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படுபவர் என்பதால் இது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷீத் கான் காயம் குறித்து ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ரஷீத் கான் நீக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது. "அவர் முழு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். மேலும் ஜூன் 7 ஆம் தேதி இறுதி ஒருநாள் போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த ஆகஸ்ட் முதல் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை வரிசையாக இந்த ஆண்டு இறுதிவரை நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடர் இரு அணிகளும் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்கின்றன.