INDvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா நியூசிலாந்து கிரிக்கெட் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்று இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சொதப்பினாலும், டாரில் மிட்செல் அபாரமாக விளையாடி சதமடித்து 130 ரன்கள் குவித்தார். ராச்சின் ரவீந்திராவும் 75 ரன்கள் குவிக்க, நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விராட் கோலியின் அபார பேட்டிங்
274 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் முறையே 46 மற்றும் 26 ரன்களில் வெளியேறினர். விராட் கோலி ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினாலும், மறுமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களிலும், கேஎல் ராகுல் 27 ரன்களிலும் வெளியேறினர். சூர்யகுமார் வெறும் 2 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த ஜடேஜா தாக்குப்பிடித்து விராட் கோலியுடன் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினார். சிறப்பாக ஆடிய கோலி 95 ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தாலும், ஜடேஜா கடைசி வரை அவுட்டாகாமல் 39 ரன்களுடன் 48வது ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற உதவினார்.