இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்வினை களமிறக்குவதில் கவனம் தேவை; முன்னாள் வீரர் எச்சரிக்கை
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தனது ஆறாவது லீக் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. ஞாயிற்றுக்கிழமை (அக்.29) லக்னோவில் ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், மைதானத்தின் சுழலுக்கு சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் ரவிச்சந்திரன் மீண்டும் களமிறங்குவார் என கிரிக்கெட் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒருநாள் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய அஸ்வின், அதன் பிறகு எந்த போட்டியிலும் விளையாடும் லெவனில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, அஸ்வினை இந்த போட்டியில் பயன்படுத்துவதில் அணி நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியதன் முழு விபரம்
லக்னோவில் ஒருநாள் உலகக்கோப்பைக்காக தயார் செய்யப்பட்டுள்ள ஆடுகளம் ஐபிஎல் போட்டியின்போது பயன்படுத்தப்பட்டது அல்ல என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், அஸ்வினை விளையாடத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்தியா எதிரணியின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்று பரிந்துரைத்துள்ளார். மேலும், "உங்களுக்கு முன்னால் இங்கிலாந்தைப் பார்க்கும்போது, ஆஃப் ஸ்பின்னரை வைத்து விளையாடுவோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இது ஐபிஎல்லில் இருந்த கருப்பு மண் ஆடுகளம் அல்ல. இது இப்போது பவுன்ஸ் மற்றும் வேகம் கொண்ட சிவப்பு மண் ஆடுகளமாக உள்ளது." என்றார். இந்தியா இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து இதுவரை ஒரு வெற்றியை மட்டுமே பெற்று மிகவும் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.