ஒடிசா ரயில் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய இந்திய கால்பந்து அணி
இண்டர்காண்டினென்டல் கோப்பையை வென்றதற்காக ஒடிசா அரசிடம் இருந்து பெற்ற ரூ.1 கோடி பரிசில் ஒரு பகுதியை பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு வழங்க இந்திய கால்பந்து அணி முடிவு செய்துள்ளது. இறுதிப் போட்டியில் லெபனானை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில், போட்டியை நடத்த உதவிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்திய வெற்றி பெற்ற உடனேயே அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு அறிவித்தார். இந்நிலையில், ஒடிசாவின் பாலசோரில் நடந்த கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்குவதாக இந்திய கால்பந்து அணி அறிவித்துள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற உடனேயே வீரர்கள் ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளது.
இந்திய கால்பந்து அணியின் ட்வீட்
இந்திய அணி வெளியிட்டுள்ள ட்வீட்டில் "எங்கள் வெற்றிக்காக அணிக்கு ரொக்கப் போனஸ் வழங்கிய ஒடிசா அரசுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். டிரஸ்ஸிங் அறையின் உடனடி மற்றும் கூட்டு முடிவின்படி, அதில் ரூ. 20 லட்சத்தை இந்த மாத தொடக்கத்தில் மாநிலத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளோம்.' எனத் தெரிவித்துள்ளது. மேலும் மற்றொரு ட்வீட்டில், "மக்கள் சந்தித்த இழப்பிற்கு எதுவும் ஈடுசெய்ய முடியாது, ஆனால் குடும்பங்கள் மிகவும் கடினமான காலங்களில் சமாளிக்க இது சிறிய அளவில் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று தெரிவித்துள்ளது.