டி20 கிரிக்கெட்டில் அபார செயல்திறன்; பாகிஸ்தானின் நீண்ட கால சாதனையை முறியடித்தது இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி 2024ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-1 என்ற வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வடிவத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக, 2024 டி20 உலகக்கோப்பையை வென்றதன் மூலம், இந்த வடிவத்தில் இந்திய அணிக்கு 2024 சிறப்பான ஆண்டாக மாறியது. மேலும், தனது 11 ஆண்டுகால ஐசிசி கோப்பை வறட்சியை இறுதியாக முடிவுக்கு கொண்டு வந்தது. இதுதவிர, இந்திய அணி இந்த ஆண்டு ஐந்து இருதரப்பு டி20 தொடர்களில் விளையாடி அனைத்து தொடர்களையும் கைப்பற்றியுள்ளது மற்றும் டி20 வடிவத்தில் இரண்டு போட்டிகளில் மட்டுமே இந்த ஆண்டு தோல்வியடைந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஆப்பிரிக்க அணிகளான ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மட்டுமே இந்த ஆண்டு இந்தியாவை டி20 கிரிக்கெட்டில் வீழ்த்தியுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் வெற்றி சதவீதம்
இந்திய அணி 2024இல் விளையாடிய 26 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு சூப்பர் ஓவர் வெற்றிகள் உட்பட 24 போட்டிகளில் வியக்கத்தக்க எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவின் இந்த ஆண்டுக்கான டி20 வெற்றி சதவீதம் 92.31% ஆகும். இதன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 வெற்றி சதவீதத்தைக் கொண்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சாதனையை முறியடித்துள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் அணி 2018 இல் 19 போட்டிகளில் விளையாடி 17 போட்டிகளில் வென்றது. அதன் மூலம், 89.47% என்ற வெற்றி சதவீதத்தைக் கொண்டு இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது இந்தியா அதை முறியடித்துள்ளது.
பட்டியலில் அடுத்தடுத்து உள்ள நாடுகள்
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக வெற்றி சதவீதத்தைக் கொண்ட முதல் இரண்டு நாடுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ள நிலையில், 3, 4 மற்றும் 5வது இடங்களில் யாரும் எதிர்பாராத அணிகள் உள்ளன. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் 33 போட்டிகளில் 29 வெற்றிகளுடன் உகாண்டா அணி 87.88 சதவீதத்துடன் உள்ளது. நான்காவது இடத்தில் பப்புவா நியூ கினியா 17 போட்டிகளில் 14 வெற்றிகளுடன் 87.5 சதவீதத்துடனும், ஐந்தாவது இடத்தில் தான்சானியா 29 போட்டிகளில் 21 வெற்றிகளுடன் 80.77 சதவீதத்துடனும் உள்ளன.
இந்திய அணியில் மாற்றம்
2024 டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு, இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இதையடுத்து, இந்திய டி20 அணி தற்போது மாற்றத்தை எதிர்நோக்கி வரும் நிலையில், முழுநேர டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். அணியில் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா மற்றும் மயங்க் யாதவ் போன்ற இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சனின் சிறப்பான ஃபார்ம் அவருக்கும் அணிக்கும் வெற்றியாக மாறியுள்ளது. இந்த சிறப்பான செயல்திறன் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி பட்டத்தை தக்கவைக்க உதவும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர்.