பிரதமர் மோடி வரும் 23-ஆம் தேதி தமிழகம் வருகை; மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான பிரசாரத்தை தொடங்கி வைக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23, வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இந்த பயணத்தின் போது அவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
பயணம்
பிரதமர், இரண்டே கால் மணி நேரம் மட்டுமே வருகை
பிரதமரின் இந்தப் பயணம் வெறும் இரண்டே கால் மணி நேரம் (சுமார் 2 மணி 15 நிமிடங்கள்) மட்டுமே நீடிக்கும் மின்னல் வேகப் பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது. மதியம் 2:15 மணிக்குத் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் சென்றடைகிறார். மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இந்த மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே. வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பாதுகாப்பு
சாலை பயணத்தை தவிர்க்கும் பிரதமர்
நிகழ்ச்சி முடிந்தவுடன் மாலை 4:30 மணிக்கு மதுராந்தகத்திலிருந்து புறப்பட்டு 5:00 மணிக்குச் சென்னை வரும் பிரதமர், 5:05 மணிக்கே மீண்டும் டெல்லிக்குப் புறப்படுகிறார். இந்த பயணத்தின் போது சாலை வழி பயணத்தை தவிர்த்து, முழுக்க முழுக்க ஹெலிகாப்டர் மற்றும் விமானம் மூலமே பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் நிலவும் மும்முனை போட்டிக்கு மத்தியில், பிரதமரின் இந்த வருகை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இதையொட்டி செங்கல்பட்டு மற்றும் சென்னை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.