
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; 25 பந்துகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
செய்தி முன்னோட்டம்
மகளிர் கிரிக்கெட்டில் கென்னிங்டன் ஓவலில் நடந்த இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்தது. சர்வதேச கிரிக்கெட்டில், ஆடவர் மற்றும் மகளிர் என அனைத்து வடிவங்களிலும் இல்லாத வகையில் உலகில் முதல்முறையாக சாதனை செய்துள்ளது. முன்னதாக, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டியிலும் வென்று தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. எனினும், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகள் சோபியா டன்க்லி மற்றும் டேனியல் வயட்-ஹாட்ஜ் ஆகியோரின் 137 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப் அணியை வலுவாக்கியது.
15 ஓவர்கள்
15 ஓவர்களுக்குப் பிறகு அடுத்தடுத்து விக்கெட்
15வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 136 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆட்ட நேர முடிவில் 171/9 என்ற அளவில் வியத்தகு முறையில் சரிந்தது. அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி சர்மா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த திருப்பத்தை முன்னெடுத்தனர். குறிப்பிடத்தக்க வகையில், சர்வதேச கிரிக்கெட்டின் எந்தவொரு வடிவத்திலும் 25 பந்துகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் அணியாக இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பெற்றது. இது ஆடவர் அல்லது மகளிர் போட்டிகளில் இதற்கு முன் கண்டிராத சாதனையாகும். ஒருபுறம் உலக சாதனை செய்தாலும், போட்டியைப் பொறுத்தவரை 172 ரன்கள் இலக்கை எட்ட கடைசி வரை போராடிய இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.