மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை பந்தாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
துபாயில் நடந்துவரும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) நியூசிலாந்து அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை குல் பெரோஷாவை முதல் ஓவரிலேயே டக்கவுட் ஆக்கி இந்திய அணி அதிர்ச்சி கொடுத்ததோடு, ரன்களையும் கட்டுப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அருந்ததி ரெட்டி பந்துவீச்சு அபாரம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நிடா தார் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசய்ய அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா 7 ரன்களில் வெளியேறினாலும், ஷெபாலி வர்மா 32 ரன்கள் மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸ் 23 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை மீட்டனர். அதன் பின்னர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 29 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ள இந்தியா, அடுத்து புதன்கிழமை இலங்கைக்கு எதிராக விளையாட உள்ளது.