இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிச.17) ஜோகன்னஸ்பர்க்கின் நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. முன்னதாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்த பிறகு முதல் ஒருநாள் போட்டிக்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இரு அணிகளிலும் உள்ள வீரர்கள் வரவிருக்கும் ஐபிஎல் ஏலம் மற்றும் எஸ்ஏ டி20 லீக்கிற்கு முன் தங்கள் திறமையை சோதிக்க இந்த போட்டி உதவும். மேலும் டி20 உலகக்கோப்பை இன்னும் ஆறு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டிகள் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், அணியின் நீண்ட கால உத்தியில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தவும் ஒரு தளத்தை வழங்குகின்றன.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இதுவரை 91 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியில்லா நிலையில், அதில் தென்னாப்பிரிக்கா 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் அணி 38 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 3 போட்டிகளில் முடிவில்லாமல் முடிந்துள்ளன. தென்னாப்பிரிக்காவில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா தொடர்களை பொறுத்தவரை, இந்தியா இதுவரை 6 தொடர்களில் விளையாடியுள்ளன. எனினும், அவற்றில் 2017-18இல் விராட் கோலி தலைமையிலான அணி மட்டுமே தொடரை வென்றுள்ளது. வேறு எந்தவொரு இந்திய கேப்டனாலும் தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வெல்ல முடியாத நிலையில், கேஎல் ராகுல் கோலியின் சாதனையை சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டிக்கான விளையாடும் லெவன் பின்வருமாறு:- இந்தியா : ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங். தென்னாப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஸோர்ஸி, ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென், ஐடென் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கேசவ் மஹாராஜ், நண்ட்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், ஒட்னியல் பார்ட்மேன்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை
ஞாயிற்றுக்கிழமைக்கான வானிலை அறிக்கையில் ஜோகன்னஸ்பர்க்கில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைப்பொழிவுக்கான வாய்ப்பு 51 சதவீதம் இருக்கும் எனக் கூறப்பட்டாலும், நேரம் செல்ல செல்ல மழைக்கான வாய்ப்பு குறைந்துவிடும் என்றும், வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிட்ச் நிலைமையை பொறுத்தவரை அதன் பிளாட் டிராக் மூலம் பேட்டர்களுக்கு சாதகமாக உள்ளது. கடந்த காலத்தில் தென்னாப்பிரிக்கா இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 435 ரன்கள் இலக்கை சேஸ் செய்து வெற்றியும் கண்டுள்ளது. மொத்தத்தில் பேட்டர்களுக்கான சொர்க்கமாகவும், பந்து வீச்சாளர்களுக்கு சவாலான மைதானமாகவும் அறியப்படும் இங்கு விளையாடிய 53 ஒருநாள் போட்டிகளில், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிகள் 30ல் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா போட்டி விபரங்கள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கின் நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) நடைபெற உள்ளது. உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பகல் ஆட்டமாக அங்கு நடைபெற உள்ளது. எனினும், இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைகாட்சி சேனல்களிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையில் கண்டு களிக்கலாம்.