இங்கிலாந்துக்கு எதிரான U19 மகளிர் டி20 தொடர்: பவிகா அஹிரே தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து U19 மகளிர் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 வீராங்கனைகள் கொண்ட இந்திய U19 மகளிர் அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 26 முதல் டிசம்பர் 6 வரை நடைபெறும் இத்தொடருக்குப் பவிகா அஹிரே கேப்டனாகவும், ஆனாடி டக்டே துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இரா ஜாதவ், நிதி மஹ்தோ, பூர்வா சிவாச், மெஹக் நர்வாஸே, மைத்ரி மனியார், ஈஷ்வரி அவ்சரே, தீயா யாதவ், ஷ்ரேயா எஸ். சவான், சமைய்ரா ராகவ், குமாரி பாலக், உமா காஷ்வி, அக்சா பர்மர் மற்றும் பாலக் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வதோதரா மற்றும் சூரத்
டி20 போட்டிகளின் முழு அட்டவணை
இந்தியா மற்றும் இங்கிலாந்து U19 மகளிர் அணிகள் மோதும் இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் வதோதராவிலும், கடைசி மூன்று ஆட்டங்கள் சூரத்திலும் நடைபெற உள்ளன.
அதன்படி, நவம்பர் 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கும், நவம்பர் 28-ஆம் தேதி மதியம் 1 மணிக்கும் முதல் இரண்டு டி20 போட்டிகள் வதோதராவில் நடைபெறுகின்றன.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 1-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மூன்றாவது போட்டியும், டிசம்பர் 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நான்காவது போட்டியும், டிசம்பர் 6-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியும் சூரத் மைதானத்தில் நடைபெற உள்ளன.
2027 U19 உலக கோப்பை
உலக கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக அமையும் தொடர்
வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்குத் தயாராகும் வகையில், இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
உலகக் கோப்பைக்கு முன்பாக இளம் வீராங்கனைகளுக்குச் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் அனுபவத்தை வழங்குவதுடன், அணியின் பலம், பலவீனம் மற்றும் வீராங்கனைகளின் திறமைகளைத் துல்லியமாக மதிப்பிடவும் இத்தொடர் பெரிதும் உதவும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.