ஆசிய கோப்பை 2023 : இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 12) நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 53 ரன்கள் எடுத்து அரைசதம் விளாசிய நிலையில், மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்காத நிலையில், இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் சிறப்பாக பந்துவீசிய துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளையும், சரித் அசலங்க 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
172 ரன்களுக்கு சுருண்டது இலங்கை
214 ரன்கள் எனும் எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கை ஜஸ்ப்ரீத் பும்ராவும், முகமது சிராஜும் சிதைத்தனர். பின்னர், ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் கூட்டு சேர்ந்து இலங்கை அணியை சிதறடித்த நிலையில், தனஞ்சய டி சில்வா 41 ரன்களும், துனித் வெல்லலகே 42ரன்களும் எடுத்து அணியை மீட்க போராடினர். எனினும், இறுதியில் 41.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், வியாழக்கிழமை பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையே நடக்கும் போட்டியில் வெல்லும் அணி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதும்.