India in ODI World Cup Finals: ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் இந்திய அணியின் செயல்திறன்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் நான்காவது முறையாக இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, மூன்று முறை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், அதில் இரண்டு முறை வெற்றியையும் ஒரு முறை தோல்வியையும் பெற்றுள்ளது. இந்தமுறை இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடும் முன், இந்தியா விளையாடிய முந்தை மூன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.
1983 ஒருநாள் உலகக்கோப்பை, முதல்முறையாக கோப்பையை வென்ற இந்தியா
60 ஓவர் வடிவத்தில் நடந்த கடைசி ஒருநாள் உலகக்கோப்பையான 1983 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு கத்துக்குட்டி அணியாகவே பலராலும் பார்க்கப்பட்டது. ஆனால், தனது முதல் போட்டியிலேயே ஜாம்பவான் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெளுத்தெடுத்த இந்தியா அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. லீக் சுற்றில் இரண்டு தோல்விகளை மட்டுமே பெற்ற இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் மீண்டும் வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்ட இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை வென்றது.
2003 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி
2003 ஒருநாள் உலகக்கோப்பையில் சவுரவ் கங்குலி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோல்வியைத் தழுவிய நிலையில், மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்ட நிலையில், அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 359 ரன்கள் குவித்தது. ரிக்கி பாண்டிங் அபாரமாக விளையாடி 140 ரன்கள் குவித்தார். இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் வீரேந்திர சேவாக் மட்டும் அதிகபட்சமாக 82 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொதப்ப இறுதியில் 234 ரன்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது.
2011 ஒருநாள் உலகக்கோப்பையில் மீண்டும் மகுடம் சூடிய இந்தியா
எம்எஸ் தோனி தலைமையில் 2011 ஒருநாள் உலகக்கோப்பையில் களமிறங்கிய இந்திய அணி லீக் சுற்றில் தென்னாப்பிரிக்காவுடன் ஒரே ஒரு தோல்வியை மட்டும் பெற்றது. அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கையை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்தது. மஹேல ஜெயவர்தனே கடைசி வரை அவுட்டாகாமல் 103 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் கவுதம் காம்பிர் மற்றும் எம்எஸ் தோனி கடைசி வரை அவுட்டாகாமல் 48.2 ஓவர்களில் இலக்கை எட்டியதன் மூலம், இரண்டாவது முறையாக இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி
கடந்த காலங்களில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இரண்டுமுறை கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி, தற்போது ரோஹித் ஷர்மா தலைமையில் மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், கடந்த காலங்களை போல் அல்லாமல், இந்த சீசனில் இந்திய அணி லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய வீரர்கள் சிறப்பான ஃபார்மில் உள்ள நிலையில், இந்த சீசனில் அதிக ரன் குவித்தவராக விராட் கோலி 711 ரன்களுடன் உள்ளார். மேலும், முதல் 4 போட்டிகளில் விளையாடாமல் தாமதமாக விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைத்த முகமது ஷமி 3 ஐந்து விக்கெட்டுகளுடன் மொத்தமாக 23 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட் எடுத்தவராக உள்ளார்.