INDvsPAK : டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்வையாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023இல் சனிக்கிழமை (அக்.14) நடைபெற்ற இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான போட்டி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒரே நேரத்தில் 3.5 கோடி பார்வையாளர்களுடன் புதிய சாதனையை படைத்தது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் பெறப்பட்ட மிக உயர்ந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை ஆகும். அக்டோபர் 14 அன்று நடந்த மோதல், டிஸ்னி ஹாட்ஸ்டார் பிளாட்ஃபார்ம் மற்றும் நாடு முழுவதும் டிஜிட்டல் விளையாட்டு பார்வையாளர்களுக்கு ஒரு முக்கியமான தருணத்தைக் குறித்தது." என்று தெரிவித்துள்ளது. முன்னதாக. இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது 3.2 கோடி பார்வையாளர்களை பெற்றதே அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் உலகக்கோப்பையில் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகளை வைத்துள்ள டிஸ்னி ஸ்டார்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான பிரத்யேக ஒளிபரப்பு மற்றும் ஊடக உரிமைகளை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் டிஸ்னி ஸ்டார் பெற்றுள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் டிஸ்னி ஸ்டார் ஒளிபரப்பியது. ஆனால் அதன் பார்வையாளர் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. டிஜிட்டல் பார்வையாளர்களின் எண்ணிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தியா தலைவர் சஜித் சிவானந்தன், இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கான பார்வையாளர் எண்ணிக்கை குறித்து கூறுகையில், "டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் கண்ட அனைத்து ரசிகர்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கிரிக்கெட் போட்டிகள் தொடர்வதால், எங்களின் அனைத்து பயனர்களுக்கும் ஒப்பிடமுடியாத பார்வை அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டு தொடரும்." என்று கூறினார்.