Page Loader
உலக ஹாக்கி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
உலக ஹாக்கி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி

உலக ஹாக்கி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2023
02:55 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் நான்காவது முறையாக பட்டத்தை வென்று சாதனை படைத்த இந்திய ஹாக்கி அணி சமீபத்திய எஃப்ஐஎச் உலக ஹாக்கி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. முன்னதாக, சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொண்ட இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நான்காவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்று, அதிக முறை பட்டத்தை வென்ற அணி எனும் சாதனை படைத்தது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி வெற்றி மூலம் தரவரிசையில் இந்தியா 2,771.35 புள்ளிகளைப் பெற்றது. மேலும் மூன்றாவது இடத்தில் 2,763.50 புள்ளிகளுடன் இருந்த இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

india eyes victory in asian games

உலக தரவரிசையில் முதலிடத்தில் நெதர்லாந்து

எஃப்ஐஎச் உலக ஹாக்கி தரவரிசையில் 3,095.90 புள்ளிகளுடன் நெதர்லாந்து முதலிடத்திலும், 2,917.87 புள்ளிகளுடன் பெல்ஜியம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஆசிய அணிகளைப் பொறுத்தவரை மலேசியா தரவரிசையில் ஒன்பதாவது இடத்திலும், தென்கொரியா 11வது இடத்திலும், பாகிஸ்தான் 16வது இடத்திலும், ஜப்பான் 18வது இடத்திலும் உள்ளன. இதற்கிடையே, இந்தியாவின் முன்னேற்றம் உலக ஹாக்கி மட்டத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. 2021இல் டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாற்று சிறப்புமிக்க வெண்கலப் பதக்கத்தை வென்று நாற்பது ஆண்டு கால ஒலிம்பிக் சகாப்தத்தை மீட்டெடுத்தனர். அப்போது தொடங்கி, சீராக முன்னேறி வரும் இந்திய அணி, அடுத்து சீனாவின் ஹாங்சோவில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது கவனத்தை குவித்துள்ளது.