LOADING...
பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! எஃப்ஐஹெச் புரோ ஹாக்கி தொடரில் 7 கோல்கள் அடித்து அபார வெற்றி
பாகிஸ்தானை 7-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி

பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! எஃப்ஐஹெச் புரோ ஹாக்கி தொடரில் 7 கோல்கள் அடித்து அபார வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 27, 2026
01:17 pm

செய்தி முன்னோட்டம்

லண்டனில் உள்ள லீ வேலி ஹாக்கி மற்றும் டென்னிஸ் மையத்தில் நடைபெற்ற எஃப்ஐஹெச் புரோ லீக் தொடரின் விறுவிறுப்பான ஆட்டத்தில், ஆடவர் இந்திய ஹாக்கி அணி தங்களது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. ஜூன் 26 அன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்க நிமிடங்களில் பாகிஸ்தான் அணி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றதால் இந்திய ரசிகர்களுக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது. எனினும், அதன் பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள், பாகிஸ்தான் அணியின் தடுப்பாட்டத்தை முற்றிலும் சிதறடித்து அடுத்தடுத்து கோல்களைக் குவித்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தனர்.

கோல் வேட்டை

இந்திய வீரர்களின் கோல் வேட்டை

போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் அபு பக்கர் மஹ்மூத் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பைச் சாதகமாக்கிக் கோலாக மாற்றி தனது அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். ஆனால், இரண்டாவது குவார்ட்டரில் இருந்து ஆட்டத்தை முமுமையாகத் தன்வசப்படுத்திய இந்திய அணியில், ஆட்டத்தின் 20 வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் முதல் கோலை அடித்து சமன் செய்தார். அதனைத் தொடர்ந்து 26 வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோலையும், இரண்டாவது பாதியில் ஹர்திக் சிங், ஜுக்ராஜ் சிங், அபிஷேக், ராஜ் குமார் பால் மற்றும் தில்ப்ரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்து 7-1 என்ற இமாலய வெற்றியை உறுதி செய்தனர்.

புள்ளிப் பட்டியல்

புள்ளிப் பட்டியலின் தற்போதைய நிலவரம்

இந்த ஆட்டத்தில் தனது அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்திய வீரர் ஹர்திக் சிங் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்த எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி தொடரின் தற்போதைய புள்ளிப் பட்டியலில், மொத்தம் உள்ள ஒன்பது அணிகளில் இந்திய அணி 15 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 டிரா மற்றும் 7 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் நீடிக்கிறது. மறுபுறம், விளையாடிய 15 போட்டிகளிலும் தோல்வியடைந்து ஒரு புள்ளி கூடப் பெறாமல் பாகிஸ்தான் அணி புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் இருப்பது அந்த நாட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அடுத்த போட்டி

இங்கிலாந்து அணியுடன் மோதவிருக்கும் அடுத்த ஆட்டம்

பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற இந்த மாபெரும் மற்றும் நம்பிக்கையான வெற்றியைத் தொடர்ந்து, இந்திய ஹாக்கி அணி தங்களது அடுத்த லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முக்கியமான போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) இதே லண்டன் லீ வேலி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தற்போதைய புள்ளிப் பட்டியலில் 31 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் வலுவான இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி தங்களது வெற்றிப் பயணத்தைத் தொடருமா என்று இந்திய விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

Advertisement