Loading...
சாஃப் சாம்பியன்ஷிப் கால்பந்து: மாலத்தீவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
சாஃப் கால்பந்து போட்டியில் மாலத்தீவை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

சாஃப் சாம்பியன்ஷிப் கால்பந்து: மாலத்தீவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

எழுதியவர் Vasuki
Nov 11, 2026
08:14 pm

செய்தி முன்னோட்டம்

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெற்ற 2026 சாஃப் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் குரூப் பி லீக் ஆட்டத்தில், மாலத்தீவு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியனான இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் பாதியில் இந்திய வீரர் சுஹைல் அகமது பட் அடித்த பெனால்டி கோல் இறுதிவரை வெற்றியைத் தக்கவைத்துக் கொடுத்தது.

பெனால்டி கோல்

சுஹைல் அகமது பட்டின் பெனால்டி கோல்

இளம் 23 வயதுக்குட்பட்ட (U23) வீரர்களைக் களம் இறக்கியுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற மாலத்தீவுக்கு எதிரான ஆட்டத்திற்கு தலைமை பயிற்சியாளர் நௌஷாத் மூசா அணியில் 7 மாற்றங்களைச் செய்தார்.

ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் அப்துல் ரபீஹ் பந்தை லாவகமாகக் கடத்திச் சென்றபோது, மாலத்தீவு பின்கள வீரர் ஹுசைன் சிஃபாவு அவரை பெனால்டி எல்லைக்குள் வீழ்த்தினார்.

இதற்கு நடுவர் உடனடியாக பெனால்டி வழங்க, அதனை நேர்த்தியாகப் பயன்படுத்தி சுஹைல் அகமது பட் பந்தை கோல் போஸ்ட்டின் இடது மூலைக்குள் செலுத்தி இந்தியாவை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.

கடைசி நிமிட பதற்றம்

முதலிடத்துடன் அரையிறுதிக்குத் தகுதி

இரண்டாவது பாதியில் மாலத்தீவு அணி சமன் செய்ய தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இந்திய கோல்கீப்பர் பிரியான்ஷ் துபே அபாரமாகச் செயல்பட்டு மாலத்தீவின் அனைத்து கோல் முயற்சிகளையும் தடுத்து நிறுத்தினார்.

குறிப்பாக, 79-வது நிமிடத்தில் அலி ஹம்தாஅன் அடித்த ஃப்ரீ-கிக் மற்றும் கூடுதல் நேரத்தில் (Stoppage time) எதிரணி வீரர் எதன் இப்ராகிம் ஜாகி அடித்த மிக நெருக்கமான ஷாட்டை தனது முகத்தால் தடுத்து காப்பாற்றியது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.

இரண்டு வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி, வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் களம் காணவுள்ளது.

ADVERTISEMENT