'போதைப்பொருள் சோதனைக்கு தயார், ஆனால் ஒரு நிபந்தனை' : மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண போதைப்பொருள் சோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒத்துக் கொண்டுள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (மே 21) பேசிய பிரிஜ் பூஷன் சரண் சிங், "போதைப்பொருள் சோதனை, பாலிகிராஃப் சோதனை அல்லது உண்மை கண்டறிதல் சோதனை என அனைத்திற்கும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்னுடன் வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரும் இந்த சோதனைகளுக்கு உட்பட வேண்டும் என்பதுதான் எனது நிபந்தனை. இரு மல்யுத்த வீரர்களும் தங்களை சோதனை செய்யத் தயாராக இருந்தால், பின்னர் அழைக்கவும். நானும் இதற்கு தயாராக இருக்கிறேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று கூறினார்.
மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்
கடந்த ஜனவரியில் முதல்முறையாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு கூறியதன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும் சொன்னபடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் முதல் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஹரியானாவின் மெஹாமில் விவசாயிகள் நடத்திய காப் பஞ்சாயத்து கூட்டத்தில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, பிரிஜ் பூஷன் சரண் சிங் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.