
சின்னச்சாமி மைதானத்தில் போட்டிகள் கிடையாது; மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் மும்பைக்கு மாற்றம் செய்தது ஐசிசி
செய்தி முன்னோட்டம்
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிருக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணையில், போட்டிகளை நடத்தவிருந்த பெங்களூரின் சின்னசாமி மைதானம் நீக்கப்பட்டுள்ளது. அந்த மைதானத்திற்குப் பதிலாக, நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் விளையாட்டு மைதானம் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை நடத்தும் என ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன், செப்டம்பர் 30 அன்று தொடக்கப் போட்டியான இந்தியா vs இலங்கை போட்டி கவுகாத்தியில் நடைபெறவுள்ளது. இந்த மாற்றம், கடந்த ஜூன் 4-ஆம் தேதி சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நடந்த சோகமான கூட்ட நெரிசல் காரணமாக எடுக்கப்பட்டது.
ஆர்சிபி
ஆர்சிபி கோப்பையும் சோகமும்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 18 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு முதல் ஐபிஎல் கோப்பையை வென்றதைக் கொண்டாட, ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி'குன்ஹா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை, இந்த மைதானம் பெரிய நிகழ்வுகளை நடத்தத் தகுதியற்றது என அறிவித்ததை அடுத்து, பெங்களூர் நகர காவல்துறை போட்டிகளுக்கு அனுமதி மறுத்தது.
போட்டிகள் மாற்றம்
பெங்களூர் மைதான போட்டிகள் மாற்றம்
ஆணையத்தின் அறிக்கை காரணமாக, பெங்களூரில் நடைபெறவிருந்த ஐந்து போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும். எனினும், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், போட்டியின் இடம் மாற்றப்படலாம் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது. உலகக் கோப்பையை நடத்தவிருந்த முக்கிய நகரமான பெங்களூர் நீக்கப்பட்டுள்ளது, நகரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.