ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன் தொடர்ந்து முதலிடம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்காவிட்டாலும், புதன்கிழமை (ஜூன் 14) வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். அதே நேரத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சு தரவரிசையில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். ஜூலை 2022 இல் கடைசியாக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர் காயத்தால் இந்திய அணியில் நீண்ட காலமாக இடம் பெறாத ஜஸ்பிரித் பும்ரா, இரண்டு இடங்கள் சரிந்து எட்டாவது இடத்திற்கு வந்துள்ளார். இதற்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானே பேட்டிங் தரவரிசையில் 37வது இடத்திற்கு உயர்ந்தார். மேலும் ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் 94வது முன்னேறியுள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர்கள் அபார சாதனை
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதல் மூன்று இடங்களையும் ஆஸ்திரேலிய வீரர்கள் கைப்பற்றி ஒரு அரிய சாதனையை படைத்துள்ளனர். மார்னஸ் லாபுஷாக்னே பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை கைப்பற்றியுள்ளனர். கார் விபத்தைத் தொடர்ந்து ஓய்வில் இருந்து வரும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், தரவரிசையில் தொடர்ந்து 10வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 12 மற்றும் 13வது இடங்களில் உள்ளனர்.