2024 யு19 உலகக்கோப்பை போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) யு19 உலகக்கோப்பை 2024இன் முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி போட்டி இலங்கையில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறும். ஐசிசியின் 11 முழு உறுப்பினர்கள் மற்றும் தகுதிச் சுற்று மூலம் தேர்வான நமீபியா, நேபாளம், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து அணிகள் என மொத்தம் 16 அணிகள் போட்டியிடுகின்றன. அனைத்து போட்டிகளும் கொழும்பில் அமைந்துள்ள சாரா ஓவல், கொழும்பு கிரிக்கெட் கிளப், நோன்ட்ஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப், சிங்கள கிரிக்கெட் கிளப் மற்றும் ஆர் பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகிய ஐந்து மைதானங்களில் நடக்க உள்ளன.
ஜனவரி 30 முதல் நாக் அவுட் போட்டிகள்
ஜனவரி 13 அன்று யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் நிலையில், போட்டியின் முதல் நாளில் மூன்று போட்டிகள் நடக்க உள்ளன. இதன்படி, தொடக்க நாளில் இலங்கை ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. மேலும், 2022 இறுதிப் போட்டியாளர்களான இங்கிலாந்து ஸ்காட்லாந்தையும், நியூசிலாந்து நேபாளத்தையும் எதிர்கொள்கிறது. ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், பிப்ரவரி 4 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடக்க உள்ளது. யு19 உலகக்கோப்பையை பொறுத்தவரை, ஐந்து பட்டங்களை வென்று மிகவும் வெற்றிகரமான அணியாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா மூன்று முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும், இங்கிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.