
இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்! சர்வதேச கிரிக்கெட்டில் அமலுக்கு வரும் புதிய விதிகள்!
செய்தி முன்னோட்டம்
ஐசிசி வரும் ஜூன் 1 முதல் விளையாட்டு நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான கிரிக்கெட் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு தலைமை நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து விளையாடும் நிலைமைகளில் மாற்றங்களை ஐசிசி அறிவித்தது.
இதில் முக்கிய அம்சமாக கடந்த இரண்டு வருடங்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சாஃப்ட் சிக்னல் விதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சவுரவ் கங்குலி கூறுகையில், சாஃப்ட் சிக்னல் சர்ச்சை குறித்து இரண்டு ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
icc new rule changes
ஹெல்மெட், ஃப்ரீ ஹிட்டில் புதிய விதிகள்
சவுரவ் கங்குலி மேலும் கூறுகையில், வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது மற்றும் அதிக ஆபத்துள்ள நிலைகளில் ஹெல்மெட்களைப் பயன்படுத்துவது கட்டாயம் என்று அறிவித்தார்.
இதன்படி வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும்போது பேட்டிங் செய்பவர்கள், விக்கெட் கீப்பர்கள் ஸ்டம்புகள் அருகில் நிற்கும் போது மற்றும் பீல்டர்கள் பேட்டருக்கு மிக அருகில் பீல்டிங் செய்யும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஒரு ஃப்ரீ ஹிட் டெலிவரியில் பந்து ஸ்டம்பைத் தாக்கும் போதும், ரன் எடுக்க முயற்சிக்கலாம்.
ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.