கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டிருந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் ஜூலை 2023இல் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியாது எனக் கூறி விலகிவிட்டது. விக்டோரியாவின் முன்னாள் பிரீமியர் டான் ஆண்ட்ரூஸ், அதிகரித்த பட்ஜெட் செலவுகள் காரணமாக விக்டோரியா மாகாணத்தால் இந்த விளையாட்டு போட்டியை நடத்த முடியாது என அறிவித்தார். அதன் பிறகு, இந்த போட்டியை நடத்தும் இடத்தை தேர்வு செய்வதற்கான விவாதம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது கிளாஸ்கோ நகரத்தை காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் இறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிளாஸ்கோ 2014இல் காமன்வெல்த் போட்டிகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.