ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு பயிற்சியாளர்களாக விவிஎஸ் லக்ஷ்மண், ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமனம்
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியை பேட்டிங் ஜாம்பவான் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் வழிநடத்த உள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் சமயத்தில் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளும் நடக்க உள்ளதால், இந்தியாவின் முதன்மை அணி ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ளது. அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட துணை ஊழியர்கள் குழு இந்த அணியுடன் உலகக்கோப்பையில் பங்கேற்கும். இதற்கான அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்நிலையில், இந்த அணியை வழிநடத்தும் பொறுப்பு விவிஎஸ் லக்ஷ்மண் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் அணியின் பயிற்சியாளராக ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமனம்
இந்திய ஆடவர் அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட உள்ள நிலையில், மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு முன்னாள் ஆல்-ரவுண்டர் ஹிருஷிகேஷ் கனிட்கர் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். ஆடவர் அணியைப் போல் அல்லாமல் மகளிர் கிரிக்கெட்டில் முழு பலம் கொண்ட வழக்கமான இந்திய அணியே களமிறங்க உள்ளது. மேலும் இந்திய மகளிர் அணிக்கு நிரந்தர தலைமை பயிற்சியாளர் இன்னும் நியமைக்கபப்டாத நிலையில், ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமனம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மட்டுமே எனக் கூறப்படுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவின் ஹாங்சோவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்