ஒருநாள் உலகக்கோப்பையில் யாரும் செய்யாத மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து
டெல்லி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.15) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. அதாவது, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதி பெற்ற 11 அணிகளிடமும் தோல்வியைத் தழுவிய முதல் அணியாக இங்கிலாந்து மாறியுள்ளது. சுமார் அரை நூற்றாண்டுக்கு முன், 1975இல் நடந்த முதல் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து தனது முதல் தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1979இல், இங்கிலாந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றது.
இந்தியா முதல் ஆப்கானிஸ்தான் வரை - இங்கிலாந்து அணி பெற்ற தோல்விகள்
வெஸ்ட் இன்டீஸிடம் தோல்வியை சந்தித்த பிறகு, 1983இல் கிரிக்கெட் உலகையே திகைக்க வைத்த இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது. அதே தொடரில் நியூசிலாந்திடமும் தோல்வியைத் தழுவியது இங்கிலாந்து. நியூசிலாந்து உலகக்கோப்பையில் பெற்ற முதல் வெற்றியும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து 1987இல் பாகிஸ்தான், 1992இல் ஜிம்பாப்வே, 1996இல் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது. பின்னர், 2011இல் கத்துக்குட்டி அணிகளான வங்கதேசம் மற்றும் அயர்லாந்திடம் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து தற்போது ஆப்கான் கிரிக்கெட் அணியிடமும் தோற்று இந்த மோசமான சாதனையை செய்துள்ளது. 2019 சீசனில் கோப்பையை வென்ற இங்கிலாந்து தற்போது தொடர் தோல்விகளால் பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில், அரையிறுதிக்கு முன்னேறுவதே கேள்விக்குரியதாகி உள்ளது.