
முடிவடைந்த ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்காலம்; மீண்டும் பயிற்சியாளராகத் தொடரவிருக்கிறாரா?
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவுடன் நேற்று நடைபெற்ற முடிந்த 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்தியா.
நேற்றைய இறுதிப்போட்டியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக் காலமும் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில், மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை எனப் பதிலளித்திருக்கிறார் அவர்.
இந்தியா மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், பிசிசிஐ வட்டாரத்திலும் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது குறித்த கேள்விகளும், யோசனைகளும் இன்னும் எழவில்லை.
கிரிக்கெட்
செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் டிராவிட் கூறியது என்ன?
"இந்த தொடரில் நான் வேறு எதைப் பற்றியுமே சந்திக்கவில்லை. தொடரைப் பற்றிய சிந்தனைகள் மட்டுமே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் என் பதவிக்காலம் மற்றும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பது எது குறித்துமே நான் சிந்திக்கவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார் ராகுல் டிராவிட்.
"இப்பொழுது தான் ஒரு தோல்வியில் இருந்து வெளியே வந்திருக்கிறோம். அது (பயிற்சியாளர் பதவிக்காலம்) குறித்த நேரம் வரும் போது அதனைப் பற்றி முடிவெடுப்பேன்" எனத் தெரிவித்துள்ளார் அவர்.
மேலும், அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையிலும் பயிற்சியாளராக செயல்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.