இந்தியாவிற்கு எதிராக டீன் எல்கர் அபார சதம், பாகிஸ்தான் தடுமாற்றம், மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கண்காணிக்க புதிய குழு
தென்னாப்பிரிக்கா- இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 245 ரன்களுக்கு சுருண்ட நிலையில், டீன் எல்கர் சதம் அடித்தார். டாஸ் வென்று தென்னாப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 208/8 சேர்த்தது. இரண்டாம் நாளின் தொடக்கத்தில், அபாரமாக விளையாடிய கேஎல் ராகுல், சதம் அடித்தார். அவர் 101 ரன்களுக்கு அவுட் ஆனதை தொடர்ந்து இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்காவிற்கு, எல்கர் சிறப்பாக ஆடி சதம் விலாசினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 256-5 என வலுவான நிலையில் உள்ளது.எல்கர்(140*), மார்கோ ஜான்சன்(3*) ஆகியோர் ஆட்டமிழகாமல் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியா எதிராக பாகிஸ்தான் தடுமாற்றம்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. இரண்டாம் நாளை ஆஸ்திரேலிய அணி 145/3 என்ற வலுவான நிலையில் தொடங்கினாலும், மிட்செல் மார்ஷ்(41) தவிர பின் வரிசை வீரர்கள் சோதப்பியதால், 318 ரன்களுக்கு அந்த அணை ஆல்-அவுட் ஆனது. பின்னர் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு, ஆஸ்திரேலியா பவுலர்கள் பெரும் தலைவலியாக இருந்தனர். தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் ஏமாற்றிய நிலையில், ஷபீக்(62) மற்றும் மசூத்(54) அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். இருப்பினும் ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சால், பாகிஸ்தான் 194 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மகளிர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது
ஆஸ்திரேலியா- இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையான, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய அணி, அதே தன்னம்பிக்கையுடன் ஒருநாள் தொடருக்குள் செல்கிறது. 2024ல் வங்கதேசத்தில் டி20 உலகக் கோப்பை, 2025ல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய அணி தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் வலுவாக உள்ள ஆஸ்திரேலியா அணி, இந்த ஆண்டு மற்றும் மூன்று ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது. இந்தியாவுக்கு எதிராக இருதரப்பு தொடரை ஒருபோதும் இழக்காத ஆஸ்திரேலியா அணி, இந்தியாவிற்கு எதிராக 40:10 வெற்றி சாதனையைப் பெற்றுள்ளது.
மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கண்காணிக்க குழு அமைப்பு
இடைநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கவனிக்க, மத்திய அரசின் பரிந்துரை ஏற்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு மூவர் கொண்ட தற்காலிக குழுவை அமைத்துள்ளது. ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் எம்.எம். சோமயா மற்றும் முன்னாள் தேசிய சாம்பியன் ஷட்லர் மஞ்சுஷா கன்வார், மற்றும் பஜ்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், பஜ்வா ஏற்கனவே மத்திய அரசால் மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் சரண் சிங் மீதான வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் பதவிவிலகினார். அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில், அவரின் உதவியாளர் சஞ்சய் சிங் வென்றதை தொடர்ந்து, வீரர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், சம்மேளனம் தற்காலிகமாக கலைக்கப்பட்டது.
ஐஎஸ்எல் கால்பந்து: கேரளா வெற்றி
தற்போது நடந்து வரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், நேற்றைய மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட் அணிக்கு எதிரான போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி (0-1) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஹேட்ரிக் வெற்றி பெற்றுள்ள கேரளா அணி, 12 போட்டிகளில் 26 புள்ளிகள் பெற்று, எஃப் சி கோவா அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. அதே சமயம், மோகன் பாகன் தனது மூன்றாவது தொடர் தோல்வியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. கேரளாவின் டயமண்டகோஸ், ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் அடுத்த கோல், கிட்டத்தட்ட போட்டியின் முடிவை தீர்மானித்து விட்டது. பின்னர், தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய கேரளா அணி, இறுதி வரை கோல் வழங்காமல் வெற்றிபெற்றது.