ODI World Cup 2023 : சச்சின், ரோஹித்திற்கு பிறகு இந்த சாதனையை செய்த 3வது வீரர் டேவிட் வார்னர்
வியாழக்கிழமை (நவம்பர் 16) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் 29 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்தார். அதாவது, இந்த 29 ரன்கள் மூலம் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் டேவிட் வார்னர் 528 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும், முன்னதாக 2019 ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் அவர் 647 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் 500 ரன்களுக்கும் மேல் சேர்த்த மூன்றாவது வீரர் ஆனார்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் ஷர்மாவின் செயல்திறன்
டேவிட் வார்னர் இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்தார். முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 1996 மற்றும் 2003 ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவை பொறுத்தவரை 2019 மற்றும் 2023 தொடர்களில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதற்கிடையே, வார்னரைத் தவிர, ரிக்கி பாண்டிங் (2007), மேத்யூ ஹெய்டன் (2007) மற்றும் ஆரோன் பின்ச் (2019) ஆகியோர் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்காக ஒரு உலகக்கோப்பை தொடரில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த இதர வீரர்களாக உள்ளனர்.