உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான அரசு செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழனன்று (டிசம்பர் 12) சிங்கப்பூரில் நடந்த FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து சாதனை படைத்தார். வெறும் 18 வயதில், டி.குகேஷ் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவை விஞ்சி போட்டியின் வரலாற்றில் மிகவும் இளம் வயது சாம்பியனானார். மேலும், விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, இந்த பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார்.
Twitter Post
குகேஷை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
"சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷ், சீனாவின் டிங் லிரெனை வென்று உலக செஸ் சாம்பியனாகத் திகழ்ந்துள்ளார். மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த டி. குகேஷை முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வாழ்த்தி, தொலைபேசியில் பேசி பாராட்டியுள்ளார்". "தமிழகத்திற்கு பெருமை சேர்த்த குகேஷுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி, அவரை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு, குகேஷுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.