ஒருநாள் உலகக்கோப்பைக்கு ரிஷப் பந்த் உடற்தகுதி பெறுவார் என பிசிசிஐ நம்பிக்கை
இந்தியாவின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கியுள்ளார். 2023 டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பந்த், பின்னர் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வந்தார். இதனால் அவர் பார்டர் கவாஸ்கர் டிராபி, ஐபிஎல் 2023 மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் விளையாடவில்லை. தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிஷப் பந்த் பயிற்சியை தொடங்கியுள்ளார். வழக்கத்தை விட அவரது உடல்நிலை விரைவாக தேறிவரும் நிலையில், ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக அவரை முழுமையான உடற்தகுதி பெறவைத்து அணியில் இணைந்த்துவிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடெமியில் ரிஷப் பந்த்
பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிஷப் பந்த், பிசியோ எஸ் ரஜினிகாந்தின் மேற்பார்வையில் உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார். நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அக்வா தெரபி, லைட் நீச்சல் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகியவற்றின் கலவையான மறுவாழ்வு அமர்வுகளை மேற்கொண்டு வரும் ரிஷப் பந்த், ஓய்வில் இருக்கும்போது பயிற்சி முகாம்களுக்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு வருகிறார். அவர் விரைவில் குணமடைவார் என நம்பும் பிசிசிஐ, ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக அணியில் சேர்த்துவிட வேண்டும் என நினைக்கிறது. ஆனால் உண்மையில் அதற்குள் அவர் முழு உடற்தகுதி பெறுவது சந்தேகம்தான் என தேசிய கிரிக்கெட் அகாடமி வட்டங்களில் கூறப்படுகிறது.