LOADING...
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு என தகவல்
தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிக்க பிசிசிஐ திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு என தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 21, 2025
11:59 am

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் ஒப்பந்தத்தை ஜூன் 2026 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, அவரது தலைமைப் பண்பின் மீது பிசிசிஐ அதிக நம்பிக்கையை வைத்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அஜித் அகர்கரின் பதவிக்காலத்தில், இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. அவரது ஒப்பந்த நீட்டிப்பு, டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் வீரர்களின் சுமுகமான மாற்றத்தை நிர்வகித்ததில் அவரது திறமைக்கு ஒரு சான்றாக உள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர்

ஒருநாள் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனமா?

மற்றொரு அறிக்கையில், ரோஹித் ஷர்மாவிற்குப் பிறகு ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரை நியமனம் செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. என்டிடிவி அறிக்கையின்படி, செப்டம்பரில் நடக்க உள்ள ஆசிய கோப்பை தொடருக்குப் பிறகு இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை 2025 டி20 வடிவத்தில் நடக்க உள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் அதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஷுப்மன் கில், டி20 கிரிக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஒருநாள் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் என்ற ஃபார்முலாவை பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், பிசிசிஐ முறையான அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே இது உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.