போல் வால்ட் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கம்! 4.15மீ தாண்டி தமிழக வீராங்கனை பரனிகா இளங்கோவன் சாதனை
செய்தி முன்னோட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆறாம் நாளில் மகளிருக்கான போல் வால்ட் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீராங்கனை பரனிகா இளங்கோவன் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் இவர் 4.15 மீட்டர் உயரத்தைத் தாண்டி, கஜகஸ்தான் நாட்டின் பொலினா இவனோவாவுடன் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில் போல் வால்ட் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான பெருமையை பரனிகா பெற்றுள்ளார்.
தடகளப் போட்டி
தடகளப் பிரிவில் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து அசத்தும் இந்திய வீரர்கள்
பரனிகாவின் வெற்றிக்கு முன்பாகவே, அன்றைய நாளில் தடகளப் பிரிவில் இந்தியா பல முக்கிய பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தது.
ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் 28:29.38 வினாடிகளில் இலக்கைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
அதேபோல மகளிர்க்கான குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர், தனது நான்காவது முயற்சியில் 17.17 மீட்டர் தூரத்திற்கு பந்தை எறிந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
துப்பாக்கிச் சுடுதல்
துப்பாக்கிச் சுடுதல் மற்றும் மேஜை பந்து போட்டிகளில் கிடைத்த பதக்கங்கள்
அன்றைய நாளில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் கமல்ஜீத் மற்றும் சுருச்சி இந்தர் சிங் இணை தங்கப் பதக்கம் வென்றது.
மேலும் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ருத்ராங்ஷ் பாட்டீல், நீரஜ் குமார் கூட்டணி வெள்ளி வென்றது.
மேஜைப் பந்து கலப்பு இரட்டையர் பிரிவில் மானுஷ் ஷா, தியா சித்தாலே இணை வெண்கலப் பதக்கம் பெற்றது.
பதக்கப் பட்டியல்
இந்திய பதக்கப் பட்டியல் உயர்வு மற்றும் பிற போட்டிகளின் நிலவரம்
கபடி போட்டியில் இந்திய ஆண் மற்றும் பெண் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்தன.
மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஸ்கவாஷ் போட்டியிலும் இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறினர்.
இந்த சிறப்பான ஆட்டங்களின் மூலம் இந்தியா 2 தங்கம், 9 வெள்ளி மற்றும் 12 வெண்கலத்துடன் தனது ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையை 23 ஆக உயர்த்தி சாதனை படைத்துள்ளது.