"இங்கிலாந்து தோற்றதற்கு காரணம் இதுதான்": சச்சின் டெண்டுல்கர் கருத்து
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. இதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனையை படைத்துள்ளது, இங்கிலாந்து. அதாவது, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதி பெற்ற 11 அணிகளிடமும் தோல்வியைத் தழுவிய முதல் அணியாக இங்கிலாந்து மாறியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டினை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை கொண்ட இங்கிலாந்து, இப்படி ஒரு மோசமான சாதனை புரிந்தது, கிரிக்கெட் வீரர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானின் வெற்றி அவர்களை மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சச்சினின் கருத்து
இங்கிலாந்தின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடுகள் வெளிப்பட்டன. குறிப்பாக ரஹ்மத்துல்லா குர்பாஸ் திடமான இன்னிங்ஸ் விளையாடினார்". "இங்கிலாந்துக்கு இது மோசமான நாள். எப்போதுமே தரமான ஸ்பின்னர்கள் பந்து வீசும்போது பந்துகளை நீங்கள் அவர்களுடைய கைகளில் இருந்து வருவதை பார்க்க வேண்டும்". "ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதனை செய்ய தவறினார்கள். மாறாக அவர்கள் அதை பந்து பிட்ச்சில் எப்படி சுழன்று வருகிறது என்று பார்த்து விளையாடினார்கள். அதுவே அவர்களுடைய தோல்விக்கு காரணம் என்று நான் கருதுகிறேன். களத்தில் சிறந்த ஆற்றலுடன் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது" என்று பதிவிட்டுள்ளார்.