
இங்கிலாந்து தொடருக்கான இந்திய யு19 கிரிக்கெட் அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர்ப்பு; ஆயுஷ் மத்ரே கேப்டனாக நியமனம்
செய்தி முன்னோட்டம்
ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை திட்டமிடப்பட்டுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 16 பேர் கொண்ட யு19 இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் அடங்கும்.
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட ஆயுஷ் மத்ரே இந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் அபிக்யான் குண்டு துணை கேப்டனாகவும் அணியின் இரண்டு விக்கெட் கீப்பர்களில் ஒருவராகவும் பணியாற்றுவார்.
செயல்திறன்
ஆயுஷ் மத்ரே செயல்திறன்
ஐபிஎல்லில் இந்த சீசனில் அறிமுகமான மத்ரே, ஆறு போட்டிகளில் 34.33 சராசரியாகவும் 187.27 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 206 ரன்கள் எடுத்து ஐபிஎல்லில் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றார்.
28 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் உட்பட அவரது ஆக்ரோஷமான ஸ்ட்ரோக் ஆட்டம், அவரை இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக அடையாளம் காட்டி உள்ளது.
அவருடன் இணைந்து, ஐபிஎல்லில் கவனம் ஈர்த்துள்ள மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷியும் இந்திய யு19 அணியில் இடம் பிடித்துள்ளார்.
இவர் ஏழு ஐபிஎல் போட்டிகளில் 36 சராசரி மற்றும் 206.55 என்ற ஸ்ட்ரைக்கிங் ரேட்டில் 252 ரன்கள் எடுத்துள்ளார்.
குறிப்பாக, ஐபிஎல் வரலாற்றில் 35 பந்துகளில் சதமடித்து வேகமாக சதமடித்த இந்தியர் ஆனார்.
வீரர்கள்
இங்கிலாந்து தொடருக்கான இந்திய யு19 அணி வீரர்களின் பட்டியல்
இந்திய U19 அணி: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ்.அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ராவ்னா படேல், யுதாவ்னா படேல், ஹென்ட், முகமது எனான், ஆதித்யா ராணா, அன்மோல்ஜீத் சிங்.
காத்திருப்பு வீரர்கள்: நமன் புஷ்பக், டி தீபேஷ், வேதாந்த் திரிவேதி, விகல்ப் திவாரி, அலங்கிரித் ரபோல் (விக்கெட் கீப்பர்).