பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம்: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு குவியும் பாராட்டுகள்
பாரா ஆசிய விளையாட்டு ஆடவர் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார். அதே உயரம் தாண்டுதல் T63 பிரிவில் இந்திய வீரர்கள் சைலேஷ் தங்கத்தையும், ராம் சிங் வெண்கலத்தையும் வென்றனர். இந்நிலையில், உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு மற்றும் பிறருக்கு பெரும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துக்கள்! ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றது அவரது அசாத்தியமான திறமைக்கும் உறுதிக்கும் ஒரு சான்றாகும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்." என்று பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழிக வீரர் மாரியப்பன் தங்கவேலுவை பாராட்டியுள்ளார்.
மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து
மாரியப்பன் தங்கவேலுவுக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக அண்ணாமலை வாழ்த்து
அது போக, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நம் தமிழ்நாட்டு வீரர் தம்பி மாரியப்பன் தங்கவேலுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த பிரிவில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் இந்திய வீரர்கள் பெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது." என்று உயரம் தாண்டுதல் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "..தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சகோதரர் திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு, பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று ட்வீட் செய்துள்ளார்.