ஆசிய விளையாட்டு 2026 கபடி: ஈரானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கபடி இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பலம் வாய்ந்த ஈரானை 37-34 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்று வரலாறு படைத்துள்ளது. ஆட்டத்தின் முதல் பாதியில் 22-16 என்ற புள்ளிக் கணக்கில் வலுவான முன்னிலையைப் பெற்ற இந்திய அணிக்கு, இரண்டாவது பாதியில் ஈரான் வீராங்கனைகள் கடுமையான சவாலை அளித்தனர். ஒரு கட்டத்தில் புள்ளிகளின் வித்தியாசத்தை வெறும் 1 புள்ளியாகக் குறைத்து ஈரான் அதிர்ச்சி அளித்த போதிலும், இறுதி நிமிடங்களில் இந்திய வீராங்கனைகள் பதற்றமின்றி தற்காப்பில் மிக நேர்த்தியாக செயல்பட்டு 37-34 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தனர்.
வரலாற்று சாதனை
ஆசிய விளையாட்டில் 4-வது தங்கப் பதக்கம் வென்று வரலாறு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் மகளிர் கபடி பிரிவில் இந்திய அணி வெல்லும் 4-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.
இதற்கு முன்பு 2010, 2014, மற்றும் 2022 (ஹாங்சோ) ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றிருந்த இந்தியா, தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகத் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துள்ளது.
இதன் மூலம் மகளிர் கபடி அரங்கில் இந்தியாவின் அசைக்க முடியாத ஆதிக்கம் மீண்டும் உலகளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக இந்திய ஆடவர் கபடி அணியும் தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில் ஈரானை எதிர்கொள்கிறது.
இளம் வீராங்கனை
இந்தியாவின் வெற்றியில் மின்னிய சஞ்சு தேவி
இறுதி ஆட்டத்தின் வெற்றி நாயகியாக சத்தீஸ்கரை சேர்ந்த இளம் வீராங்கனை சஞ்சு தேவி உருவெடுத்துள்ளார்.
2002-ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் கேரகாச்சர் பகுதியில் பிறந்த இவர், 69-வது முதல் 72-வது வரையிலான தேசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப் தொடர்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்கான இடத்தைப் பிடித்தார்.
2025-ஆம் ஆண்டு தெஹ்ரானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் டாக்காவில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கபடி தொடர்களில் தங்கம் வென்ற இந்திய அணியிலும் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
சத்தீஸ்கர் அரசின் யுவா ரத்னா விருது வென்ற சஞ்சு தேவி, இந்த இறுதி ஆட்டத்திலும் முக்கியத் தருணங்களில் புள்ளிகளைக் குவித்து இந்தியாவின் தங்கப் பதக்க வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.