ஆசிய விளையாட்டு 2026: நூலிழையில் பதக்கத்தை நழுவவிட்ட இளவேனில் வாலறிவன் - பார்த் மானே ஜோடி
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில்,துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் இந்திய ஜோடி நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டுள்ளது. இப்போட்டியின் இறுதிசுற்றில் களமிறங்கிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் மற்றும் பார்த் ராகேஷ் மானே கூட்டணி மொத்தம் 376.3 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தைப் பிடித்தது. சீனாவை சேர்ந்த வாங் ஜிஃபெய் - ஷெங் லிஹாவ் ஜோடி 507.1 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. தென் கொரியாவின் ஹியோஜின் பான் - ஹாஜுன் பார்க் ஜோடி(502.9) வெள்ளியும், போட்டியை நடத்தும் ஜப்பானின் மிசாகி நோபடா - நவோகி ஹனகாவா இணை(439.7) வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின.
இறுதியில் சறுக்கல்
தகுதிச் சுற்றில் அசத்தல்
முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் இளவேனில் - பார்த் இணை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தகுதிச் சுற்றில் மொத்தம் 634.6 புள்ளிகள் குவித்து இரண்டாம் இடம் பிடித்து கம்பீரமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதில் சீனாவின் முன்னணி ஜோடி 638.9 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தது.
தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்தன.
தகுதிச் சுற்றில் காட்டிய அபார துல்லியத்தை 4 அணிகள் மோதிய இறுதிச் சுற்றில் இந்திய இணையால் தொடர முடியாமல் போனதால் பதக்கம் கைநழுவிப் போனது.
துப்பாக்கி சுடுதல்
இந்தியாவின் பதக்க நிலவரம்
இளவேனில் மற்றும் பார்த் ஆகிய இருவரும் ஏற்கனவே நடைபெற்ற மகளிர் மற்றும் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணிகளில் இடம்பெற்றிருந்தவர்கள் ஆவர்.
மகளிர் தனிநபர் பிரிவிலும் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார்.
துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இதுவரை இந்தியா 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
MMA வீராங்கனை சுசிகா தரியால் வென்ற வரலாற்று வெண்கலப் பதக்கத்தையும் சேர்த்து, நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பதக்க எண்ணிக்கை 6-ஆக (5 வெள்ளி, 1 வெண்கலம்) உயர்ந்துள்ளது.