LOADING...
ஆசிய விளையாட்டுப் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய கபடி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய கபடி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆசிய விளையாட்டுப் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய கபடி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 06, 2023
03:04 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் ஹாங்சோவில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இன் ஆடவர் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி 61-14 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. போட்டியின் ஆரம்பத்தில், பாகிஸ்தான் அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்றதால், இந்தியா 0-4 என பின்தங்கியது. எனினும், அதன் பின்னர் விரைவாக மீண்டெழுந்து, பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி 10-4 என முன்னிலை பெற்றது. அந்த 10 புள்ளிகளில் எட்டு, நவீன் குமாரின் மல்டி-பாயின்ட் ரெய்டுகளின் மூலம் வந்தது. அதன் பிறகு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்தியா, முதல் பாதி முடிவில் 30-5 என மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.

India kabaddi team beats Pakistan in Asian Games Semifinal

எட்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி

இரண்டாவது பாதியில் இந்திய அணியில் பவன் செஹ்ராவத் மற்றும் நவீன் குமாருக்கு பதிலாக சச்சின் தன்வார் மற்றும் ஆகாஷ் ஷிண்டே இடம் பெற்றனர். இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் பாகிஸ்தான் தன்னை சற்று மேம்படுத்த முடிந்தாலும், இந்தியாவின் அபார ஆட்டத்தால் போட்டியின் முடிவில் 61-14 என வெற்றி பெற்று எட்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1990ல் கபடி அறிமுகமானதில் இருந்து அனைத்து முறையும் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 2018 ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில், ஈரானிடம் தங்கத்தை இழந்ததை தவிர மற்ற ஏழு முறையும் இந்தியா தங்கம் வென்றுள்ளது.