பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன்; இந்திய அணி முடிவு
ஆசிய கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் முதல் போட்டியில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டராக களமிறங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆசிய கோப்பை போட்டி தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்தியா தனது முதல் போட்டியில் செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால், இந்தியாவின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்துவிட்டது. இதனால் அணியின் காத்திருப்பு வீரராக உள்ள சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இஷான் கிஷனுடன் களமிறங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு
ஆசிய கோப்பைக்காக கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 30) இலங்கை சென்ற இந்திய அணி கேஎல் ராகுல் குறித்து விரிவாக விவாதித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டராக இஷான் கிஷனை களமிறக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், டாப் ஆர்டர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் இஷான், மிடில் ஆர்டரில் பேட் செய்ய தயங்குவதாகக் கூறப்படுகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் மற்றும் விராட் கோலி டாப் ஆர்டரில் களமிறங்குவதால், இதற்கு தயாராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிஷன் விளையாடும் லெவனில் சேர்க்கப்படுவது இந்தியாவின் பேட்டிங் வரிசையில் கூடுதலாக ஒரு இடது கை வாய்ப்பை அளிக்கும்.