அலெக்ஸ் ஹேல்ஸ் போலி கணக்கில் வெளியிட்ட ட்விட்டர் பதிவால் இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்டர் அலெக்ஸ் ஹேல்ஸ் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து அவரது பெயரில் இயங்கும் ஒரு போலி ட்விட்டர் கணக்கில் வெளியான பதிவு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே மோதலுக்கு வித்திட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ட்விட்டர் பக்கத்தில், "ஆடுகளத்தில் ஒரு நம்பமுடியாத பயணத்திற்குப் பிறகு, எனது வாழ்க்கையின் இந்த அத்தியாயத்திற்கு விடைபெறும் நேரம் இது. நினைவுகள், தோழமை மற்றும் விளையாட்டின் அன்புக்கு நன்றி. உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி! 170-0 இன்னும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னிங்ஸ்." என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ரசிகர்கள் நக்கலடித்ததால் இந்திய ரசிகர்கள் எதிர்வினை
பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள 170-0 இன்னிங்ஸ் என்பது கடந்த 2022இல், ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா எடுத்த ஸ்கோராகும். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்தது. மேலும் அதில் அலெக்ஸ் ஹேல்ஸ் கடைசி வரை அவுட்டாகாமல் 86 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் ரசிகர்கள் இந்த பதிவை முன்வைத்து இந்திய அணியை நக்கலடித்த நிலையில், இந்திய ரசிகர்கள் பலரும் உடனடியாக எதிர்வினை ஆற்றத் தொடங்கினர். அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வை முன்வைத்து இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ட்விட்டரில் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.