AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 30) நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 242 ரன்களை இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான திமுத் கருணாரத்னே 15 ரன்களில் அவுட்டாகி இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பாதும் நிசங்க மற்றும் குஷால் மெண்டிஸ் ஜோடி நிலைத்து நின்று நிதானமாக ஆடி அணியை மீட்டனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாதும் நிசங்க 46 ரன்களில் அவுட்டானார்.
ஃபசல்ஹாக் ஃபரூக்கி அபார பந்துவீச்சு
இலங்கை கிரிக்கெட் அணியில் பாதும் நிசங்க அவுட்டானவுடன் சதீரா சமரவிக்ரமவுடன் ஜோடி சேர்ந்த குஷால் மெண்டிஸ் வேகமாக ரன் குவிக்காவிட்டாலும், நிலைத்து நின்று மெதுவாக ரன் சேர்த்தனர். குஷால் மெண்டிஸ் 39 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து சமரவிக்ரமவும் 36 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இவர்களுக்கு பின் வந்த இலங்கை வீரர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சுக்கு திணறியதோடு, சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இதனால் இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கான் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஃபசல்ஹாக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.