LOADING...
டி20 உலகக்கோப்பை 2026: நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மெகா சாதனை; 19 ஆண்டுகால இந்திய ரெக்கார்டு காலி
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் 19 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான்

டி20 உலகக்கோப்பை 2026: நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மெகா சாதனை; 19 ஆண்டுகால இந்திய ரெக்கார்டு காலி

எழுதியவர் Sekar Chinnappan
Feb 08, 2026
03:25 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் இன்று நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த அணி என்ற இந்திய கிரிக்கெட் அணியின் சாதனையை (180/9, ஆண்டு 2007) ஆப்கானிஸ்தான் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தகர்த்தெறிந்துள்ளது.

அதிரடி

குல்பதின் நைப் அதிரடி ஆட்டம்

ஆப்கானிஸ்தான் அணியின் இந்த இமாலய ஸ்கோருக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் குல்பதின் நைப். அவர் வெறும் 35 பந்துகளில் 63 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். அவருக்குத் துணையாக செதிக்குல்லா அடல் (29 ரன்கள்) நிதானமாக விளையாடினார். இறுதி ஓவர்களில் தர்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் முகமது நபி ஆகியோர் கொடுத்த கேமியோ பங்களிப்பால் ஆப்கானிஸ்தான் 180 ரன்களைக் கடந்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெற்றி

நியூசிலாந்தின் பதிலடி மற்றும் வெற்றி

சவாலான 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முஜீப் உர் ரஹ்மான் வீசிய ஒரே ஓவரில் ஃபின் ஆலன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தனர். இருப்பினும், விக்கெட் கீப்பர் பேட்டர் டிம் சீஃபர்ட் (65 ரன்கள்) மற்றும் கிளென் பிலிப்ஸ் (42 ரன்கள்) ஜோடி ஆட்டத்தைத் தன்வசப்படுத்தியது. இறுதியில் மார்க் சாப்மேன், டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் மிட்செல் சான்ட்னர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 17.5 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

தாக்கம்

புள்ளிப் பட்டியலில் இதன் தாக்கம்

'குரூப் ஆஃப் டெத்' (Group of Death) என்று அழைக்கப்படும் குரூப்-டி பிரிவில் இந்த வெற்றி நியூசிலாந்துக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்துள்ளது. 2024 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று வெளியேறிய நியூசிலாந்து, இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் அதற்குப் பழிதீர்த்துக் கொண்டது. ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கில் சாதனை படைத்தாலும், பந்துவீச்சில் ரன்களைக் கட்டுப்படுத்தத் தவறியதால் இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

Advertisement