2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறவிருக்கும் அணிகள்?
செய்தி முன்னோட்டம்
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி ஆறு போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியது இந்தியா.
இந்திய அணி அரையிறுதியில் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, எனினும் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதியாகவில்லை.
அடுத்தடுத்த போட்டிகளில் இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்தப் போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்.
மேலும், அடுத்த இலங்கையுடன் மோதவிருக்கும் போட்டியில் வெற்றிபெரும் பட்சத்தில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு இந்தியா முதல் அணியாகத் தகுதி பெறும்.
ஒருநாள் உலகக்கோப்பை
வெளியேறிய அணிகள்?
இந்தியாவைத் தவிர்த்து தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இந்த அணிகளுக்கும் தங்களுடைய அரையிறுதிக்கான நுழைவுச்சீட்டை தங்கள் கைகளிலேயே வைத்திருக்கின்றன.
அதாவது தாங்கள் ஆடும் போட்டிகளின் வெற்றி தோல்வியை வைத்தே இந்த அணிகளின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
தற்போது வரை நடைபெற்று முடிந்திருக்கும் ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருக்கின்றன வங்கதேசமும், இங்கிலாந்தும்.
இந்த அணிகள் கிட்டத்தட்ட தொடரில் இருந்து வெளியேறிவிட்டன என்றே கூறலாம். இன்னும் ஓரிரு போட்டிகளில் இந்த அணிகள் அதிகாரப்பூர்வமாகவும் அரையிறுதி வாய்ப்பை இழந்து 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறக்கூடும்.