தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தும் ஷாவ்மி
சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி, உலகளவில் தற்போது வரை தாங்கள் விற்பனை செய்து வரும் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்ட MIUI இயங்குதளத்தை வழங்கி வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, ஷாவ்மி நிறுவனம் புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தலாம் என தகவல் கசிந்திருந்தது. தற்போது அது குறித்த அதிகாரப்பூர்வ பதிவொன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் ஷாவ்மியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான லெய் ஜூன். "இன்று ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை பதிவு செய்கிறோம். பல ஆண்டு கால உழைப்பிற்குப் பிறகு புதிய 'ஷாவ்மி ஹைப்பர்OS' இயங்குதளமானது ஷாவ்மி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் அறிமுகமாகவுள்ளது" என எக்ஸில் பதிவிட்டிருக்கிறார் அவர்.
ஷாவ்மியின் புதிய 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்:
குவால்காம் நிறுவனமானது இந்த அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தங்களுடைய ஸ்னாப்டிராகன் நிகழ்வை நடத்தவிருக்கிறது. இந்த நிகழ்வில் தான் அந்நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் ப்ராசஸரான 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' சிப்பை வெளியிடவிருக்கிறது குவால்காம். குவாக்காமின் புதிய ஃப்ளாக்ஷிப் சிப்பைக் கொண்டு ஷாவ்மி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகவிருப்பதாக முன்பே தகவல் வெளியான நிலையில், தற்போது புதிய சிப்செட்டுடன், புதிய இயங்குதளத்தையும் 14 சீரிஸூக்குக் கொடுக்கவிருக்கிறது ஷாவ்மி. 14 சீரிஸைத் தொடர்ந்து, தங்களது பிற உலகளாவிய ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தப் புதிய இயங்குதளத்தை ஷாவ்மி வழங்கவிருப்பதை எக்ஸின் மறுமொழி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார் லெய் ஜூன். புதிய குவால்காம் சிப் வெளியான சில நாட்களிலேயே 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஷாவ்மி.