இஸ்ரேல்-பாலஸ்தீனம் குறித்த உள்ளடக்கங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த எக்ஸ்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரைத் தொடங்கிய பால்ஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடர்பாக உருவாக்கப்படும் பல்வேறு கணக்குகள் நிகழ் நேரத்தில் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் சிஇஓ லிண்டா யாக்கரினோ. ஐரோப்பிய ஒன்றியத்தில் எக்ஸ் தளத்தின் மூலம் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தொடர்பாக பதிவிடப்படும் போலி உள்ளடக்கங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து எக்ஸ் தளத்தை எச்சரித்திருந்தார் ஐரோப்பிய ஆணையர் தியரி ப்ரெடன். மேலும், மேற்கூறிய உள்ளடக்கங்கள் மீது என்ன வகையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டன என்பது குறித்து 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார் அவர்.
எக்ஸ் சிஇஓ லிண்டா யாக்கரினோவின் பதில்:
தியரி ப்ரெடனுக்கு அளிக்கப்பட்ட பதிலிலேயே மேற்கூறிய வகையில் ஹமாஸ் தொடர்பான கணக்குகள் தங்கள் தளத்தில் நீக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார் லிண்டா யாக்கரினோ. மேலும் அந்த பதிலில், "தீவிரவாத இயக்கங்களுக்கான தளம் எக்ஸ் அல்ல. மக்களின் கருத்துக்களை பொதுத்தளங்களில் பகிர்வதற்காகவே நாங்கள் சேவை செய்து வருகிறோம். வன்முறை, தீவிரவாதம் தொடர்பான உள்ளடக்கங்கள் மற்றும் மக்களை பாதிக்கும் வகையிலான கருத்துக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் குறிப்பிட்டிருக்கிறார் லிண்டா யாக்கரினோ. மேலும், இந்தப் பிரச்சினைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவுடன் கலந்துரையாடவும் தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் லிண்டா யாக்கரினோ, தனிப்பட்ட குறைகள் இருப்பினும் அதனைக் களைய உதவுவதாகத் தெரிவித்துள்ளார்.