மூன்று நாட்களில் மூன்று சிஇஓ மாற்றம்; குளறுபடிகளால் நிறைந்த ஓபன்ஏஐயில் என்ன நடக்கிறது?
கடந்த ஒரு வருடமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனம் என புகழப்பட்டு வந்த ஓபன்ஏஐ நிறுவனமானது, கடந்த சில நாட்களாக தவறான விஷயங்களுக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. முதலில் அந்நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேனை, ஓபன்ஏஐ இயக்குநர் குழு பதவி நீக்கம் செய்ததிலிருந்து, அந்நிறுவனத்திற்குள்ளிருந்த பிரச்சினைகள் பெரியளவில் வெளியே தெரியத் தொடங்கின. கடந்த இரண்டு நாட்களில் அந்நிறுவனத்தைப் பற்றி பல்வேறு வகையிலும் புதிய செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. மூன்று நாட்களில் மூன்று சிஇஓ-க்களைக் கண்டுவிட்டது ஓபன்ஏஐ. இதற்கிடையில் பழைய சிஇஓ தான் வேண்டும் என்ற ஓபன்ஏஐ ஊழியர்களும் ஒரு பக்கம், இயக்குநர் குழுவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். என்ன தான் நடக்கிறது ஓபன்ஏஐ-யில்?
புதிய இடைக்கால சிஇஓ:
சாம் ஆல்ட்மேனின் நீக்கத்தைத் தொடர்ந்து, இடைக்கால சிஇஓவாக உடனடியாக அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான மிரா முராட்டியை நியமித்தது ஓபன்ஏஐயின் இயக்குநர் குழு. முன்னாள் சிஇஓ சாம் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓவாக நியமிக்க பல்வேறு தரப்பினர்களிடமிருந்து அழுத்தம் எழு, மீண்டும் அவரை சிஇஓவாக நியமிக்க பேச்சுவார்த்த நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், திடீரென எம்மட் ஷியர் என்பரை புதிய இடைக்கால சிஇஓவாக அறிவித்தது ஓபன்ஏஐ இயக்குநர் குழு. புதிய சிஇஓவை எதிர்த்தும், சாம் ஆல்ட்மேனை வேண்டியும் 500-க்கும் மேற்பட்ட ஓபன்ஏஐ ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். அதுமட்டுமின்றி இயக்குநர் குழு உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்றனர் ஓபன்ஏஐ ஊழியர்கள்.
மைக்ரோசாஃப்டில் இணைந்த சாம் ஆல்ட்மேன்:
ஓபன்ஏஐ புதிய இடைக்கால சிஇஓவை நியமிக்கும் போதே, மைக்ரோசாஃப்டில் சாம் ஆல்ட்மேன் இணைந்திருப்பதாக எக்ஸில் தகவல் பகிர்ந்தார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா. கூகுளுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் போட்டியிட்டு வரும் ஓபன்ஏஐ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, தானும் செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் பங்கெடுத்து வருகிறது மைக்ரோசாஃப்ட். எனவே, ஓபன்ஏஐயிலிருந்து விலகிய சாம் ஆல்ட்மேன், அதன் முன்னாள் தலைவர் க்ரெக் ப்ராக்மேன் மற்றும் ஓபன்ஏயிலிருந்து விலகிய அனைத்து ஊழியர்களுக்கும் மைக்ரோசாஃப்டின் புதிய செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுப் பிரிவில் அடைக்கலம் கொடுத்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். சாம் ஆல்ட்மேனின் தலைமையில் இயங்கவிருக்கிறது மைக்ரோசாஃப்டின் இந்தப் புதிய செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுப் பிரிவு.
சத்யா நாதெல்லாவின் எக்ஸ் பதிவு:
ஓபன்ஏஐ முன்னாள் தலைவர் க்ரெக் ப்ராக்மேனின் எக்ஸ் பதிவு:
ஓபன்ஏஐயின் புதிய சிஇஓ எம்மட் ஷியர் யார்?
அமேசான் நிறுவனத்தின் கேம் ஸ்ட்ரீமிங் தளமே ட்விட்டச். 2014ம் ஆண்டு 970 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு இத்தளத்தை வாங்கியது அமேசான். ட்விட்டசை ஒரு கேம் ஸ்ட்ரீமிங் தளமாக மட்டுமில்லாமல், ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்குத் தளமாக உருவாக்கிய பெருமை எம்மட் ஷியரையே சேரும். தொழில்நுட்ப அளவில் ஒரு சிறந்த சிஇஓ என அவருக்கு பட்டமளித்திருக்கிறார்கள் அவரடன் முன்னாள் பணிபுரிந்தவர்கள். எனினும், ஊழியர்களுக்கான சிஇஓவாக அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது இல்லை எனவும் அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். ட்விட்சில் சிறப்பான செயல்பாடுகளையே கொண்டிருந்தாலும், அத்தளத்தில் பயனர்களால் உருவாக்கப்படும் வெறுப்பு பேச்சுகள் மற்றும் இனவாத கருத்துக்கள் பகிரப்படுவதைத் தடுக்க அவர் மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
எம்மட் ஷியருக்குக் காத்திருக்கும் சவால்:
ஓபன்ஏஐ நிறுவனத்தின் புதிய இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கும் எம்மட் ஷியருக்கு, அந்நிறுவன ஊழியர்களை அமைதிப்படுத்துவதே பெரிய சவாலான செயலாக இருக்கும். சாம் ஆல்ட்மேன் மற்றும் ஓபன்ஏஐயின் முன்னாள் முக்கிய நிர்வாகிகள் அந்நிறுவனத்திற்குத் திரும்பாத பட்சத்தில், தாங்களும் ஓபன்ஏஐயிலிருந்து விலகி மைக்ரோசாஃப்டிலேயே இணைவோம் எனத் தெரிவித்து வருகிறார்கள் அவர்கள். ஓபன்ஏஐயிலிருந்து வரும் அனைத்து ஊழியர்களுக்கும் பணிவாய்ப்பு வழங்கத் தயாராக இருப்பதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்திருப்பதாகக் கூறி வருகிறார்கள் அவர்கள். ஓபன்ஏஐயின் ஊழியர்கள் இல்லாமல் அந்நிறுவனம் இல்லை என அந்நிறுவனத்தின் முன்னாள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் ட்விட்டரில் பதிவுகளைப் பதிவிட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள்.
ஓபன்ஏஐ ஊழியர்களின் எக்ஸ் பதிவு:
ஓபன்ஏஐ ஊழியர்களின் எக்ஸ் பதிவு:
புதிய சிஇஓவைத் தேடும் ஓபன்ஏஐ:
புதிய இடைக்கால சிஇஓவையே ஓபன்ஏஐ ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளாமல் கலவரமாகியிருக்கும் நிலையில், மற்றொரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமான ஆன்த்ரோபிக் நிறுவனத்துடன் ஓபன்ஏஐ நிறுவனத்தை இணைக்க ஓபன்ஏஐயின் இயக்குநர் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. ஓபன்ஏஐ நிறுவனத்துக்கு போட்டி நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஆன்த்ரோபிக் நிறுவனம், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடிக்குப் போட்டியாக க்ளாவுடே என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ஒன்றையும் முன்னர் அறிமுகம் செய்திருக்கிறது. ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் துணை நிறுவனரும், சிஇஓவுமான டேரியோ அமோடெய்யை ஓபன்ஏஐயின் சிஇஓவாக நியமிக்கவே, இரு நிறுவனங்களின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையை ஓபன்ஏஐ தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. எனினும், டேரியோ அமொடெய் அந்த வாய்ப்பை மறுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஓபன்ஏஐ மீது வழக்கு தொடரத் திட்டமிடும் முதலீட்டாளர்கள்:
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஓபன்ஏஐயில் முதலீடு செய்ததைத் தொடர்ந்து, ஓபன்ஏஐயின் போட்டி நிறுவனமான ஆந்த்ரோபிக்கில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்திருக்கிறது கூகுள். கூகுள் மட்டுமின்றி அமேசான் நிறுவனமும் ஆந்த்ரோபிக்கில் 4 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்திருக்கிறது. இந்நிலையில், ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக்கின் இணைப்பு எவ்வகையில் சாத்தியம் எனத் தெரியவில்லை. ஓபன்ஏஐ இயக்குநர் குழுவின் இந்த குழப்பான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அவர்கள் மீது சட்ட ரீதியில் வழக்கு தொடுக்க, ஓபன்ஏஐ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஓபன்ஏஐ நிறுவனத்தின் 49% பங்குகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், 49% பங்குகளை அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்களும், 2% பங்குகளை லாபநோக்க மற்ற ஓபன்ஏஐ தாய் நிறுவனமும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.