Loading...
விசா, மாஸ்டர்கார்டு மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் வாடிக்கையாளர் தரவுகள் கசிவு: கார்டு எண்கள் பாதுகாப்பாக உள்ளதா?
விசா, மாஸ்டர்கார்டு மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் வாடிக்கையாளர் தரவுகள் கசிவு

விசா, மாஸ்டர்கார்டு மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் வாடிக்கையாளர் தரவுகள் கசிவு: கார்டு எண்கள் பாதுகாப்பாக உள்ளதா?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 20, 2026
08:29 am

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி நிதி மற்றும் கட்டண நிறுவனங்களான விசா, மாஸ்டர்கார்டு மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் ஆகியவற்றின் மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தரவுகள் ஹேக்கர்களால் கசியவிடப்பட்டுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு நிறுவனமான SOCRada அளித்துள்ள தகவலின்படி, 'n0n' எனப்படும் ரான்சம்வேர் ஹேக்கிங் குழு இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது. எனினும், தங்களது முக்கிய வங்கி மற்றும் கட்டண அமைப்புகள் எவ்விதப் பாதிப்புமின்றி செயல்படுவதாகவும், கிரெடிட்/டெபிட் கார்டு எண்கள் கசியவில்லை எனவும் இந்த மூன்று நிறுவனங்களும் விளக்கமளித்துள்ளன.

கசிந்த தரவு

கசிந்த தரவுகளின் விவரம்

விசா: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் செயல்படும் மூன்றாம் தரப்பு சேவை நிறுவனத்தின் தரவுகள் (டைனிங் சலுகைகள் தொடர்பான மார்க்கெட்டிங் விவரங்கள்).

மாஸ்டர்கார்டு: குறிப்பிட்ட சலுகைத் திட்டத்தில் இணைந்திருந்த வாடிக்கையாளர்களின் வரையறுக்கப்பட்ட தகவல்கள் (மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்டவை).

ஜேபி மோர்கன் சேஸ்: வங்கிக்கு சேவை வழங்கும் வெளிப்புற நிறுவனங்களிடம் இருந்த மார்க்கெட்டிங் தகவல்கள் (வாடிக்கையாளர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், சில தொலைபேசி எண்கள்).

பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் பெயர்களையோ அல்லது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் முழு எண்ணிக்கையையோ மூன்று நிறுவனங்களும் வெளியிடவில்லை.

வங்கிச் சேவை

ஜேபி மோர்கன் வங்கிச் சேவைத் தடையுடன் தொடர்பில்லை

சில நாட்களுக்கு முன்பு ஜேபி மோர்கன் சேஸ் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளை அணுகுவதிலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதிலும் சிக்கல்களைச் சந்தித்தனர்.

ஆனால், அது ஒரு மென்பொருள் கோளாறால் ஏற்பட்ட தற்காலிகத் தடை என்றும், இந்த சைபர் தாக்குதலுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது.

நிதி நிறுவனங்களின் சொந்தக் கணினி அமைப்புகள் பாதுகாப்பாக இருந்தாலும், அவற்றுடன் இணைந்து பணியாற்றும் வெளிப்புற நிறுவனங்கள் வழியாக வாடிக்கையாளர் தரவுகள் கசியும் அபாயம் இருப்பதை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளதால், வங்கிகளை போல ஆள்மாறாட்டம் செய்து அனுப்பப்படும் ஃபிஷிங் மின்னஞ்சல்கள் குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT