Loading...
டிகிரியும் கிடையாது, தேர்வும் கிடையாது! $42 மில்லியன் மதிப்பில் புதிய ஏஐ கல்லூரியை உருவாக்கிய யூடெமி நிறுவனர்
$42 மில்லியன் மதிப்பில் டிகிரியும் தேர்வும் இல்லாத புதிய ஏஐ கல்லூரி உருவாக்கம்

டிகிரியும் கிடையாது, தேர்வும் கிடையாது! $42 மில்லியன் மதிப்பில் புதிய ஏஐ கல்லூரியை உருவாக்கிய யூடெமி நிறுவனர்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2026
04:41 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல ஆன்லைன் கற்றல் தளமான யூடெமி நிறுவனத்தின் இணை நிறுவனரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் ககன் பியானி, சான் பிரான்சிஸ்கோவில் ஹோரோவிட்ஸ் ஆண்ட்ரீசன் அகாடமி என்ற புதிய தொழில்நுட்பக் கல்லூரியை தொடங்கவுள்ளார். பிரபல துணிகர முதலீட்டு நிறுவனமான ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் அளித்த 42 மில்லியன் டாலர் நிதி உதவியுடன் இந்த கல்லூரி உருவாக்கப்படுகிறது. மரபுரீதியான பட்டப்படிப்பு சான்றிதழ்கள், பரீட்சைகள் அல்லது கிரேடுகள் ஏதும் இன்றி, முழுமையாக புதிய திட்டங்களை உருவாக்கப் பயிற்சி அளிப்பதே இந்த கல்லூரியின் முதன்மை நோக்கமாகும்.

இலவசக் கல்வி

இலவசக் கட்டணத்துடன் 2027 செப்டம்பரில் தொடங்கும் முதல் கல்வி ஆண்டு

இந்த கல்லூரியின் முதலாமாண்டு கல்வித் திட்டம் 2027 செப்டம்பரில் தொடங்குகிறது.

இதில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்படும் 50 மாணவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மேலும், ஆய்வுகள் மற்றும் கணினி பயன்பாட்டிற்காக பிரதி மாணவருக்கும் $50,000 மதிப்பிலான கணினி கிரெடிட்களும் $5,000 ஆராய்ச்சி நிதியும் வழங்கப்படவுள்ளன.

பள்ளிப்படிப்பை முடித்த அல்லது கல்லூரியின் தொடக்கக் காலத்தில் இருக்கும் திறமையான இளைஞர்களை ஈர்த்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் அவர்களை சாதனையாளர்களாக உருவாக்குவதே இதன் திட்டமாகும்.

தொழில்நுட்ப நிறுவனங்கள்

கூகுள், மெட்டா, என்விடியா மற்றும் சாம் ஆல்ட்மேன் உடனான நேரடித் தொடர்பு

இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சாட்ஜிபிடி புகழ்பெற்ற சாம் ஆல்ட்மேன், மைக்ரோசாப்ட் சத்யா நாதெல்லா மற்றும் என்விடியா ஜென்சன் ஹுவாங் போன்ற சர்வதேச தொழில்நுட்பத் தலைவர்கள் நேரடியாக வழிகாட்டவுள்ளனர்.

மேலும் கூகுள், மெட்டா, ஓபன்ஏஐ, ஆந்த்ரோபிக், பலான்டீர் போன்ற உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் இக்கல்லூரியுடன் இணைந்து செயல்படவுள்ளன.

புத்தகப் படிப்பு இல்லாமல் நேரடியாக மென்பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலமே மாணவர்கள் இங்கு தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்.

ADVERTISEMENT

புதிய மாடல்

எதிர்கால கட்டணங்கள் மற்றும் சான்றிதழ் இல்லாத புதுமை மாடல்

தற்சமயம் இக்கல்லூரி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்காது என்ற போதிலும், 2028 ஆம் ஆண்டு முதல் அரசிடம் அனுமதி பெற்று இரண்டு ஆண்டு பாடத்திட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், ஆண்டிற்கு $60,000 முதல் $90,000 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என ககன் பியானி தெரிவித்துள்ளார்.

பட்டம் மற்றும் மதிப்பெண்களை விட, மாணவர்கள் உருவாக்கும் சொந்த படைப்புகள் மற்றும் தொழில்நுட்ப அனுபவமே அவர்களின் எதிர்கால பணிக்கான முக்கியத் தகுதியாக இருக்கும் என்ற புதிய கல்விப் புரட்சியை இக்கல்லூரி முன்வைக்கிறது.

ADVERTISEMENT