இன்று முழு சூரிய கிரகணம்: இந்தாண்டின் முதல் சூரிய கிரஹணத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்ப்பது எப்படி?
இன்று 2024ஆம் ஆண்டின் முழு சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது. எனினும் இது இந்திய துணைக்கண்டத்திலிருந்து பார்க்க முடியாது. ஏனெனில் இந்தியா, சூரிய கிரகணம் நடைபெறும் பாதைக்கு வெளியே அமைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள ஆர்வலர்கள், இந்த விண்ணுலக நிகழ்வை இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு, நாசாவின் நேரடி ஸ்ட்ரீமில் காணலாம். இந்த கிரகணத்தை கிட்டத்தட்ட 31.6 மில்லியன் மக்கள் கண்டுகளிப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கிரகணம், திங்கட்கிழமை 11.57 ISTக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தொடங்கி, செவ்வாய்கிழமை அதிகாலை 1.05 மணிக்கு மைனேயில் முடிவடையுமென கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் பாதை, அமெரிக்காவின் ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், மிசோரி, இல்லினாய்ஸ், கென்டக்கி, இந்தியானா, ஓஹியோ, பென்சில்வேனியா, நியூயார்க், வெர்மான்ட் மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் நகரங்களாகும்.
2031ஆம் ஆண்டு இந்தியாவில் தோன்றவுள்ள சூரிய கிரஹணம்
இந்த அபூர்வமான வான நிகழ்வின் நேரடி பாதையில் உள்ள அமெரிக்க நகரங்களில் கொலம்பஸ், கிளீவ்லேண்ட், டோலிடோ, இண்டியானாபோலிஸ், பஃபலோ, ரோசெஸ்டர் மற்றும் லிட்டில் ராக் ஆகியவை அடங்கும். இவற்றோடு, மெக்சிகோ மற்றும் கனடாவின் சில பகுதிகளும் முழு சூரிய கிரகணத்தைக் காணும். இந்தியாவில் முழு சூரிய கிரகணத்தை காண மே 21, 2031 வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அப்போது,'நெருப்பு வளையம்' என குறிப்பிடும் சூரிய கிரகணம், நாடு முழுவதும், குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்களில் இருந்து பார்க்க முடியும். 2031 கிரகணத்தின் போது, சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் செல்லும் போது சூரியனின் தோராயமாக 28.87 சதவீதத்தை மறைக்கும்.
மொத்த சூரிய கிரகண காலம்
இந்திய நேரப்படி, சூரிய கிரகணம் ஏப்ரல் 8 அன்று இரவு 9:12 மணிக்கு தொடங்கி, முழு சூரிய கிரகணம் இரவு 10:08 மணிக்கு ஏற்பட்டு, ஏப்ரல் 9, 2024 அன்று அதிகாலை 2:22 மணிக்கு முடிவடையும். மெக்ஸிகோவின் பசிபிக் கடற்கரையானது முதன்முதலில் 11:07 am PDT ஐ கிரஹணத்தை அனுபவிக்கும். மேலும் நிகழ்வு பிற்பகல் 1:30 PDT இல் மைனேவில் நிறைவடையும். முழு நிகழ்வும் சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெறும். ஆனால் நாசாவின் கூற்றுப்படி, உச்சக்காட்சி 4 நிமிடங்கள் 27 வினாடிகள் வரை மட்டுமே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரேட் அமெரிக்கன் எக்லிப்ஸின் படி, "இது ஆகஸ்ட் 21, 2017 அன்று நடந்த கிரேட் அமெரிக்கன் எக்லிப்ஸை விட இரண்டு மடங்கு அதிகமாகும்".